search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்"

    சாத்தான்குளத்தில் பழுதான ரோட்டினை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்திலிருந்து விஜயராமபுரம், அடப்புவிளை, சாமிதோப்பு, திருப்பூர் மற்றும் தட்டார்மடம் வழியாக திசையன்விளைக்கு செல்லும் மெயின்ரோடு பழுதுபட்டதால் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    பழுதான இந்த ரோட்டினை சீரமைக்கக்கோரி அப்பகுதி கிராமமக்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைத்துள்ளனர்.

    விஜயராமபுரத்திலிருந்து போடப்பட்ட புதிய தார் ரோட்டின் இருபக்க வாட்டிலும் மணல் போட்டு நிரப்புவதால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சென்றால் இந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் இந்த கிராமங்கள் வழியாக கடந்த 3 மாத காலமாக பஸ்கள், வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டது.

    இதனால் இப்பகுதி கிராமமக்கள் வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டதால் உடனே போடப்பட்ட புதிய தார்ரோட்டின் இரு பக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மணலால் நிரப்ப கோரியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைத்திட ரோட்டோரம் போர் போட கோரியும் கிராமமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து விஜயராமபுரம், திருப்பூர் இதன் சுற்றுபுரத்திலுள்ள சுமார் 300-க்கு மேற்பட்ட கிராமமக்கள் சாத்தான் குளத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் செல்வராஜ், விஜயராமபுரம் சண்முகவேல் தலைமையில் முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்த சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் நிர்வாக பொறியாளர் உட்பட நெடுஞ்சாலைத்துறையினரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் புதிதாக போடப்பட்ட ரோட்டின் இருபக்க வாட்டில் உள்ள பள்ளத்தை மூடியும், விஜயராமபுரம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க போர் போடுவது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். #tamilnews
    ×